tamilnadu

img

கார்ப்பரேட் கம்பெனிகளின் கைகளில் விதைகள்?

இந்தியாவில் விவசாயிகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விதைகளை உற்பத்தி செய்து பாதுகாத்து பராமரித்து அந்த விதைகளைபயன்படுத்தி வந்துள்ளனர். இப்போதும் மூவாயிரம் நெல் வகைகளை விவசாயிகள் பயன்படுத்தி வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் நான்கு லட்சம் நெல்வகைகள் நீண்ட நெடும் வரலாற்றில் இருந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதுபோன்று பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள், பல தானியங்களின் விதைகளை விவசாயிகளே உற்பத்தி செய்து ஆண்டாண்டுகாலமாக பயன்படுத்தி வந்துள்ளனர். 

இந்தியாவில் விதைச்சட்டங்கள்

இந்தியாவில் விதை காப்புரிமை சட்டவரலாறு 1856ஆம் ஆண்டில் தொடங்குகிறது. அன்றைய ஆட்சியாளர்களான ஆங்கிலேயர்கள் தங்கள் வர்த்தக நலன்களை பாதுகாத்திட இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தினர். இந்த சட்டம் 1859, 1872, 1883ம் ஆண்டுகளில் பல மாற்றங்களை சந்தித்துள்ளன. இந்த மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு சட்டம் 1911ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பசுமைப் புரட்சியையொட்டி குறுகிய கால அதிக மகசூல் விதைகளை உற்பத்தி செய்யும்பண்ணைகள் மத்திய மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டன. இதற்கென 1961ல் தேசிய விதைகள் கார்ப்பரேசன் உருவாக்கப்பட்டது. பசுமைப்புரட்சியை தொடர்ந்து புதியவகை விதை உற்பத்தி மற்றும் விதை வர்த்தகத்தில் தனியார்நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக விதைகளின் தரத்தையும், உற்பத்தி மற்றும் விநியோகத்தையும், முறைப்படுத்துவதற்கு 1966ஆம் ஆண்டு விதைகள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தில் உலகமய பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வர எண்ணிய மத்திய அரசு கடந்த 2004ஆம் ஆண்டு விதைகள் சட்டமசோதாவை கொண்டு வந்தது. 

பன்னாட்டு கம்பெனிகள்

அரசு துறையில் நடைபெற்று வந்த விதை உற்பத்தியில் 1988ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட “விதை உற்பத்தி வளர்ச்சியில் புதிய கொள்கை” தனியார் துறையினை ஊக்குவிப்பதாக அமைந்தது. பன்னாட்டு கம்பெனிகளை இந்திய விதை வர்த்தகத்தில் அனுமதித்தவுடன் பல பன்னாட்டு கம்பெனிகள் உள்நாட்டு கம்பெனிகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு விதைகள் உற்பத்தி, வர்த்தகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளில் ஈடுபட்டு வருகின்றன. மான்சாண்டோ, பேயர் (தற்போது இரண்டும் இணைத்துவிட்டன), மகிகோ உட்பட பத்து பன்னாட்டு கம்பெனிகள் இந்திய விதை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. உள்நாட்டில் நானூறுக்கும் அதிகமான கம்பெனிகள் விதைகள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. 

விதைச்சட்டம் 2004

கடந்த 2004ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தவிதைச்சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து விதைகளும் மத்திய அரசால் உருவாக்கப்படும். தேசிய பதிவு ஆவணத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமென இச்சட்டம் கட்டாயப்படுத்துகிறது. விதைகளை பதிவு செய்வதற்கு மத்திய அரசால் அமைக்கப்படும் மத்திய விதைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விதைகளை பதிவு அல்லது நிராகரிக்கும் விவகாரத்தில்இக்குழுவின் முடிவே இறுதியானது.பதிவு செய்யப்பட்ட விதைகள் மட்டுமே விற்பனை செய்யமுடியும்.பதிவு செய்யாத விதைகள் விற்பனை செய்வதற்கு முற்றிலும் தடை செய்யப்படுகிறது. 

விதைகளுக்கான விலைகளை தீர்மானிப்பது குறித்து சட்டத்தில் எந்த வரைமுறையும் இல்லை. ஒருமுறை பதிவு செய்யப்பட்ட விதை ஆண்டு பயிராக இருந்தால் 15 ஆண்டுகளுக்கும், நீண்டகால பயிராக (மரப்பயிர்) இருந்தால் 18 ஆண்டுகளுக்கும் பதிவு பெற்றவர்உரிமம் கொண்டாட முடியும். பதிவு பெற்றவர் மேற்கண்ட பதிவு காலத்திற்கு பின்னர்இதே காலத்திற்கு மறுபதிவு செய்து கொள்ள முடியும். அரசு மற்றும் தனியார் விதை பரிசோதனை மையங்களை விதைகளின் தரத்தை தீர்மானிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். விதை சான்றிதழ் வழங்கும் பணியிலிருந்து படிப்படியாக அரசு வாபஸ் வாங்கிக் கொள்ளும். தரமற்ற விதைகளை விநியோகித்து அதனால் பயிர்கள்அழிந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து உரிய நஷ்ட ஈடு பெறவும்சட்டத்தில்வழியில்லை. மாறாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றம்மூலம் நிவாரணம் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தை அமல்படுத்திட “விதை இன்பெக்டர்கள்”(விதை ஆய்வாளர்கள்) பகுதிவாரியாக நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம்வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாத விதைகளை, விற்பனை செய்தால்ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கிட முடியும். விவசாயிகளுக்கு எதிரான பல அம்சங்களை கொண்டிருந்த இச்சட்ட மசோதா பலத்த எதிர்ப்பின் காரணமாக தேவையான மாற்றங்களை செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. அதன் பின் இச்சட்ட மசோதா பல மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது “விதைகள் சட்ட மசோதா 2010(”Seed õill 2010)என மறு உருவெடுத்துள்ளது. இந்த மசோதா பழைய அபாயமிக்க பிரிவுகளுடனேயே வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு.

விவசாயிகள் தங்கள் விதைகளை வணிக பெயரிட்டு விற்க முடியாது. அவ்வாறு விற்க வேண்டுமென்றால் அவர்களும் தங்களுடைய விதைகளை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். நாடு முழுவதும் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டு நிரூபிக்கப்பட்ட விதைகளை மட்டுமே இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியும். இந்த நிபந்தனை ஒரு சாதாரண விவசாயிக்கு எந்த விதத்திலும் பயனற்றது. மிகப்பெரிய வணிக நிறுவனங்களே இதன்மூலம் பயனடைய முடியும் என்பதை விளக்க வேண்டியதில்லை. விதை ஆய்வாளருக்கு ஏற்கனவே இருந்ததை விட அதிகப்படியான அதிகாரங்கள் வழங்குகிறது. அதாவது விதை ஆய்வாளர் எந்தவித முன்அறிவிப்புமின்றி அவர் சந்தேகம் கொள்ளும் எந்த ஒரு இடத்தையும் எந்தநேரத்திலும் சோதனை இடலாம். அங்கு பதிவு செய்யாதவிதைகள் சேமித்து வைத்திருந்தால் விதைகளை கைப்பற்றுவது அவற்றை பாதுகாத்து வைத்துள்ள விவசாயியை கைது செய்யும் அதிகாரமும் வழங்கியுள்ளது. 

ஓராண்டு பயிருக்கு 15 ஆண்டுகளுக்கு பதிலாக 30 ஆண்டுகளும் நீண்ட கால பயிர்களுக்கு 18 ஆண்டுகளுக்கு பதிலாக 36 ஆண்டுகளுக்கு பதிவு உரிமை வழங்குகிறது. பதிவு பெற்றவர்களை தவிர வேறு யாரும் இந்த விதைகளை இக்காலத்தில் விற்பனை செய்ய முடியாது. இந்தியாவில் சுமார் 70 சதம் விதைகள் விவசாயிகள் மூலமே உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால் விவசாயிகளின் பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும். மேலும் விவசாயிகளின் அடிப்படை உரிமையான விதை சேமிக்கும் உரிமைகூட தண்டனைக்குரிய குற்றமாக மாறுகிற ஆபத்து உள்ளது. 

பெப்சி நிறுவனம்

இந்தியாவில் அறிவுச் சொத்துரிமை சட்டங்கள் உலகமயமாக்கலுக்குப் பின் மிக வேகமாக உருவெடுத்துவந்தன. இதனை அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கங்கள்கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தின. ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் மத்திய அரசு சட்டங்களை உருவாக்கியது. 1965ல் வடஅமெரிக்காவில் தொடங்கப்பட்ட பெப்சி நிறுவனம் உலகில் உள்ள முதன்மையான குளிர்பான நிறுவனம் நம்முடைய தாமிரபரணியில் தண்ணீரை உறிஞ்சி இப்போதும் கொள்ளை அடித்து கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் லேஸ் என்ற பொரித்தஉருளை சிப்ஸ் பரவலாக விற்கப்படுகிறது. குழந்தைகள் இதை விரும்பி தின்பார்கள். இதனை தின்று தின்று உருண்டையான குழந்தைகள் உலகமெங்கும் ஏராளம்.ஒபிசிட்டி என்ற ஊத்த நோயால் அவதிப்படும் குழந்தைகள் விரும்பி தின்பது இந்த லேஸ் உருளை சிப்சை தான்.இந்த நிறுவனத்தின் வருமானம் கடந்த ஆண்டு மட்டும் 6466 கோடி டாலர். அதாவது 4,52,620 கோடி ரூபாய்.

விவசாயிகள் மீது வழக்கு

கனடா நாட்டில் 1998ஆம் ஆண்டில் பெர்சி ஷ்மெய்சர் என்ற விவசாயி மீது ஒரு வழக்கு தொடர்ந்தது மான்சாண்டோ கம்பெனி. இந்த நிறுவனம் காப்புரிமை பெற்ற ரவுண்டப்ரெடி கனோலா என்ற மரபணு மாற்றம் செய்த தானியங்களை விவசாயி சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டது. தன்னுடைய வயலின் அருகில் நடவு செய்யப்பட்டிருந்த பயிர்களிலிருந்து காற்று மூலமோ, பூச்சிகள் மூலமோ அந்த மரபணுதமது வயலில் ஊடுருவி இருக்கலாம் என்று பெர்சிஷ்மெய்சர் தெரிவித்தார். கோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. விவசாயி தாக்கல் செய்த பதில் மனுவையும் தள்ளுபடி செய்தது.விவசாயி பெர்சிஷ்மெய்சர் பல கோடி டாலர் மான்சான்டோ நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று கனடா நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதே போல அமெரிக்காவில் ரவுண்டப் ரெடி விதை சோயா பீன்ஸ் விதைகளை போமேன் என்ற விவசாயி பயிரிட்டுள்ளார். ஆர்.ஆர் சோயா (ரவுண்டப் ரெடி சோயா) பயிரிட்ட பின் கோதுமை பயிரிட்டுள்ளார். அதன் பின் குளிர்காலத்திற்கு ஏற்ற குறைந்த விலையிலான சோயா வெளிநபர்களிடம் விலைக்கு வாங்கி பயிரிட்டுள்ளார். மான்சான்டோ நிறுவனம் போமேன் எங்கள் ஒப்பந்தத்தை மீறிவிட்டார் என்று கீழ்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதாவது ஒரு முறை விதை வாங்கி பயன்படுத்தி விட்டால்வாழ்நாள் முழுவதும் தன்னிடம் தான் விதை வாங்க வேண்டுமென்பது மான்சான்டோவின் நியாயம். 84 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் 45 லட்சம்) போமேன்மான்சான்டோ கம்பெனிக்கு கட்ட வேண்டும் என்று நீதிபதிஉத்தரவு. இத்தீர்ப்பை எதிர்த்து போமேன் மாநில நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கீழ் நீதிமன்ற உத்தரவை உறுதிப்படுத்தியது. அதன் பின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் மான்சான்டோவுக்கு ஆதரவாக அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் தொழில் கூட்டமைப்புகளும் செயல்பட்டன. போமேன் என்ற விவசாயிக்கு அங்குள்ள சூழியியல் ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். உச்சநீதிமன்றம் போமேன் அபராதம் கட்டவேண்டுமென தீர்ப்பளித்தது. இதைப் போல் அமெரிக்காவின் 27 மாநிலங்களில் 410 விவசாயிகள் மற்றும் 56 சிறுவணிக நிறுவனங்களுக்கு எதிராக 142க்கும் மேற்பட்ட காப்புரிமை மீறல் வழக்குகளை மான்சாண்டோ தொடுத்துள்ளதாக “உணவு பாதுகாப்பு மையம்” தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மான்சான்டோ, பேயர், டுபாண்ட், பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஆப்பிரிக்கா, இந்தியா போன்றஏழை நாடுகளிலும் செயல்படுகின்றன. வளர்ந்த நாட்டிலுள்ள விவசாயிகள் மீது வழக்கு போட்டது போலதற்போது இந்திய விவசாயிகள் மீதும் வழக்கு பதிவு செய்துநீதிமன்றம் மூலமாக நஷ்டஈடு வாங்கிட பெப்சி நிறுவனம் முயற்சி செய்துள்ளது. அதன் விபரம் வருமாறு. எப்.சி 5 என்ற உருளைக் கிழங்கு வகை பிரிட்டோலே (FC 2027) என்ற வகை விதையாகும். இதற்கான சொத்துரிமையை பெப்சி நிறுவனம் 2016ம் ஆண்டு வாங்கிவிட்டது. இதன் மூலம் பெப்சி நிறுவனம் அந்த விதைகளை விவசாயிகளிடம் நேரடியாக ஒப்பந்த சாகுபடிக்கும் கொடுக்கிறது. விதைகளை உருவாக்கித்தரும் விவசாயிகளிடமும் கொடுக்கிறார்கள். ஒப்பந்தத்தின் போது விதைகளை யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்பது போன்ற விதிகளை எழுதி வாங்கிக் கொள்கிறது பெப்சி நிறுவனம். 

இந்நிலையில் குஜராத் மாநிலத்தைச் சார்ந்த உருளைக் கிழங்கு பயிர் செய்யும் விவசாயிகள் 4 பேர் உருளைக்கிழங்கு விதைகளை சந்தையில் வாங்கி பயிர் செய்துள்ளனர். இவர்கள் பெப்சியின் ஒப்பந்த சாகுபடி பற்றி அறியாதவர்கள். நீங்கள் எப்படி எங்கள் உருளை விதையை எங்களுக்கு தெரியாமல் விவசாயம் செய்ய முடியும் என்று4 விவசாயிகளும் தலா 1.5 கோடி ரூபாய் பெப்சி நிறுவனத்திற்கு தர வேண்டுமென்று வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகளும் விவசாயசங்கங்களும் எதிர்ப்பு குரல் எழுப்பிய பின்னர் வழக்கை வாபஸ் பெற அரசும் பெப்சி நிறுவனமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சம்மந்தப்பட்ட விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை என்பது வேடிக்கையானது. இந்தியாவில் கார்ப்பரேட் கம்பெனிகள் இவ்வாறு வழக்கு போடுவது இதுவே முதல்முறை. இதனை நாம்அனுமதித்தால் எதிர்காலத்தில் விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகள் வழக்குகள் மூலம் கசக்கி பிழிந்து விடுவார்கள். 

விதை உரிமைகளைப் பாதுகாத்திட

இந்திய நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள விதைச்சட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் கீழ்கண்டஅம்சங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் பாரம்பரிய உரிமைகள் சம்மந்தப்பட்ட அனைத்து அம்சங்களும் இச்சட்டத்தில் விலக்கு அளித்திடவேண்டும். தற்போது விவசாயிகள் பயன்படுத்தும் அனைத்து விதைகளையும் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். விதைகளை பதிவு செய்யக் கூடாது எனவும் செய்யப்பட்டபதிவினை ரத்து செய்திட கோருவதற்கு மக்களுக்கு உரிமை அளிக்கப்பட வேண்டும். பதிவு பெற்றவர் விதையின் மீது உரிமை கொண்டாடுவதற்கான காலத்தை 7 ஆண்டுகளாக குறைப்பதுடன் மறுபதிவுக்கு வாய்ப்புகள் ரத்து செய்யப்பட வேண்டும். மோசமான விதைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு குறுகியகாலத்தில் நஷ்டஈடு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விதை ஆய்வாளர்களின் அதிகாரங்களை கட்டுப்படுத்தவேண்டும். 

மத்திய விதைக்குழுவில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும். விதைகள் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் தனிநபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ வழங்க கூடாது. சான்றிதழ்வழங்க விதை குழுவின் ஆலோசனையின் படி மாநில அரசே ஆணையம் அமைத்திட வேண்டும்.விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாப்பதே சட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். இந்திய நாடு முழுவதும் மட்டுமல்ல உலக நாடுகளில் உள்ள விவசாயிகள் அவரவர் நாடுகளில் பன்னாட்டுகம்பெனிகளுக்கு எதிராக ஒற்றுமையான போராட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டியது தலையாய கடமையாக இருக்க வேண்டும். இல்லையேல் உருளைக்கிழங்கு என்றால் பெப்சி, பருத்தி என்றால் மான்சாண்டோ (இப்போதுபேயர்) மொத்தத்தில் விதை என்றால் நாங்கள் தான் என்று முடிவுரை எழுத முனைந்துள்ளன பன்னாட்டு நிறுவனங்கள். “விதை என்பது ஒரு பண்டமல்ல, அது வாழ்வின்ஆதாரங்களில் ஒன்று. அதை நாம் எவ்வகையிலும் பறிபோக விட்டுவிடக் கூடாது. 


கட்டுரையாளர் : மாநிலப் பொருளாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்






;